Wednesday 3 April 2013

சர்தார் வேதரத்தினம் பிள்ளை

சர்தார் வேதரத்தினம் பிள்ளை
 வேதரத்தினம் என்ற பெயரைக் கேட்டமாத்திரத்தில், வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் நினைவுக்கு வரும். ராஜாஜி நினைவுக்கு வருவார். கடுமையான தியாகமும், முரட்டு கதர் உடையும் நம் நினைவுக்கு வரும். அது மட்டுமா? வேதாரண்யத்தில் சிறப்பாக நடைபெற்று வரும் 'கஸ்தூரிபா காந்தி கன்னியா குருகுலம்' நம் நினைவுக்கு வரும். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி அவர் காலமான அறுபதுகள் வரை, வேதரத்தினம் பிள்ளையின் பெயர் சொல்லாமல் எந்த காங்கிரஸ் இயக்கமும் தமிழ்நாட்டில் இல்லை எனலாம். அந்த அளவுக்கு அவர் தன்னை காங்கிரஸ் இயக்கத்தோடு இணைத்துக் கொண்டவர், பொதுநலத்துக்காக சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து தியாகசீலராக விளங்கியவர். அவரது வரலாற்றை இப்போது சுருக்கமாகப் பார்ப்போம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடற்கரை கிராமமான வேதாரண்யம் இவரது ஊர். இவரது தந்தையார் அப்பாகுட்டி பிள்ளை என்பவர். உப்பு சத்தியாக்கிரகம் உச்ச கட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது, இவரது உடமைகளுக்கும் ஆபத்து வந்து, இவர் கைது செய்யப்படப்போகிறார் என்ற நிலையில் அவ்வூர் மாஜிஸ்டிரேட் ஒருவர் 90 வயதைக் கடந்த முதியவர் அப்பாக்குட்டி பிள்ளையிடம் வந்து, "ஐயா! நீங்களோ பெரிய குடும்பத்தில் வந்தவர். கெளரவமான குடும்பம். உங்கள் மகன் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டால், அவர் மீது எந்த வழக்கும் வராமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்" என்றார். அதற்கு அந்த முதிய தேசபக்தர் என்ன சொன்னார் தெரியுமா? எப்படியாவது தனது மகன் ஜெயிலுக்குப் போகாமல் தப்பி, சொத்துக்களும் பறிமுதல் ஆகாமல் போனால் சரி, கேவலம் ஒரு மன்னிப்புக் கடிதம் தானே, கொடுத்துவிடலாம் என்றா எண்ணினார். இல்லை. இல்லவே இல்லை. அவர் சொன்னார், "என் மகன் வேதரத்தினம் உங்களிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பதிலும், அவன் சிறைக்குச் செல்வதையே நான் விரும்புவேன்" என்றார். அந்த முதியவரின் தேசப்பற்றுக்கு எதனை உவமை கூற முடியும்? அப்படிப்பட்ட தியாக பரம்பரையில் பல தலைமுறைகளுக்கு முந்தி உதித்தவர் தாயுமானவ சுவாமிகள். இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? தாயுமானவர் கோயில் கொண்டுள்ள திருச்சியில் உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கியது. தாயுமானவரின்  குலவாரிசுகள் வாழும் வேதாரண்யத்தில் முடிவடைந்தது. இதனை முன்னின்று நடத்தியவரும் தாயுமானவ சுவாமிகளின் வாரிசுதான். என்ன ஒற்றுமை.


இவரைப் பற்றிய ஒரு வியப்பான செய்தி. இவர் வாரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதத்தைக் கடைப்பிடித்து தன் ஆன்ம பலத்தைப் பெருக்கிக் கொண்டார். அதுபோலவே பேசா நோன்பிருந்து தன் உள்ளத்து ஒளியைப் பெருக்கிக் கொண்டார். வேதாரண்யம் எனும் அவ்வூரின் பெயருக்கேற்ப வேத நெறிகள் ஆசாரங்கள் இவைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்த குடும்பம். இவர் மற்றவர்களுக்காக சுதேசி வேஷம் போட்டவரல்ல. ஆத்மார்த்தமாக தன் சொந்த வாழ்வில் இவர் சுதேசியத்தைக் கடைப்பித்த வரலாற்றை தமிழாறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை கூறுகிறார். "இவர் வீட்டிலும் சரி, ஊரிலும் சரி, எங்கும் கைக்குத்தல் அரிசி, எங்கும் கதர் ஆடை, எங்கெங்கு நோக்கினும் கைத்தொழில் வளர்ச்சி, ஆரவாரமில்லாத, அழகிய, இனிய, எளிமையில் ஒரு வீறாப்பு இவரிடம். காந்தியடிகளிடம் மாறாத பக்தி". இப்படி வேதாரண்ய அனுபவத்தை அந்தத் தமிழறிஞர் வர்ணிக்கிறார். இவர் ஸ்தாபித்த கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் சென்று பாருங்கள். இன்றும் அவர் கூறிய வார்த்தைகளின் பொருள் புரியும். அங்கு தினந்தோறும் ஆயிரமாயிரம் பெண்கள், சிறுமிகள் முதல் பெரியவர் வரை படிப்பதும், தொழில் பயில்வதும், வேலை செய்வதும், ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உணவு அருந்துவதும், அடடா! என்ன காட்சி. இவ்வளவு குழந்தைகளையும் ஒரு தந்தையாய் இருந்து பாதுகாத்து வாழ்வுக்குப் பயன்படும் தொழில் பயிற்சி கொடுத்து வாழ்வளித்து வந்தவர் சர்தார் வேதரத்தினம். அவரது அடியொற்றி வழிநடந்து அமரரானவர் அவர் மகன் அப்பாக்குட்டிப் பிள்ளை. இப்போது அந்த சீரிய பணியினைச் சிறப்பாக நடத்தி வருபவர் அவரது பேரன் ஜுனியர் அ.வேதரத்தினம். என்ன குடும்பம். உலகமே பார்த்து வியக்கும் கைங்கரியம்.

முன்பெல்லாம் தனியொருவரை விளித்து எழுதும்போது "மகாராஜராஜ ஸ்ரீ" என்று எழுதுவசுதந்திரத்துக்கு து வழக்கமாயிருந்தது. இது எதற்கு இவ்வளவு பெரிய அடைமொழி என்று சிந்தித்து வேதரத்தினம் பிள்ளை "ஸ்ரீ" என்று போட்டால் போதாதா என்று 'தினமணி'யில் ஒரு கடிதம் எழுதினார். அதைப் படித்துப் பார்த்த ராஜாஜி அவர்கள் அவ்வாறு "ஸ்ரீ" என்றே அழைத்தால் போதும் என்று உத்தரவிட்டார். பின்னர் தி.மு.க.ஆட்சியின் போது இந்த 'ஸ்ரீ' வடமொழி என்பதால் அதற்கு பதில் "திரு" என்று போடச் செய்தனர். பழைய அடிமை நாட்களின் ஒரு மரியாதை முத்திரை மறைந்து, மக்கள் அனைவரும் சமமான உணர்வினைப் பெற முடிந்ததற்கு சர்தார் வேதரத்தினம் பிள்ளை காரணமாக இருந்திருக்கிறார்.

இவர் வாழ்க்கையில் இன்னொரு வேடிக்கையும், வேதனையும் நிறைந்த ஒரு நிகழ்ச்சி. வேதாரண்யத்தில் இவர் குடும்பத்துக்கு மிகவும் வேண்டிய நாவிதர் ஒருவர், வைரப்பன் என்பது அவர் பெயர். காந்தி மகாத்மாவிடமும், காங்கிரஸ் இயக்கத்திடமும், வேதரத்தினம் பிள்ளையிடமும் அபார பக்தியுடையவர். போலீஸ்காரர்கள் முதலாளி வேதரத்தினத்தை விலங்கிட்டுத் தெருவோடு இழுத்துச் சென்ற காட்சியைக் கண்டு இவர் பதறி ஆத்திரம் கொண்டு, இனி எந்த போலீஸ்காரருக்கும் சவரம் செய்வதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டார். உப்பு போராட்டத்திற்காக வெளியூர் போலீஸ் பலர் அங்கு வந்திருந்ததால் யார் என்று தெரியாமல் சாதாரண உடையில் வந்திருந்த ஒரு போலீஸ்காரருக்கு இவர் முகச் சவரம் செய்யத் தொடங்கி முகத்தில் சோப்பு போட்டு பாதி சவரம் முடித்துவிட்ட நிலையில், அவர் போலீஸ் என்பது தெரியவந்ததும், வேலையை அப்படியே போட்டுவிட்டு இனி நம்மால் செய்ய முடியாது என்று எழுந்துவிட்டார். போலீஸ்காரர் விடவில்லை. இவரை இழுத்துக் கொண்டு போய் மாஜிஸ்டிரேட்டிடம் நிறுத்தி நியாயம் கேட்டார். மாஜிஸ்டிரேட் வைரப்பனை, போய் இவருக்கு மீதி சவரத்தையும் செய்து முடித்துவிட்டுப் போ என்றார். வைரப்பன் தன் சவரப் பெட்டியை கையில் எடுத்துக் கொண்டு, அவர் மேஜை முன்பு சென்று, "ஐயா! அது நம்மால முடியாதுங்க. ஐயா வேணும்னா செஞ்சு விட்டுடுங்க" என்று சொல்லிக் கொண்டே பெட்டியை அவர் மேஜை மீது வைத்து விட்டார். கேட்க வேண்டுமா அவருக்கு வந்த கோபத்துக்கு. ஆறு மாத கடுங்காவல் தண்டனை விதித்தார். அதோடு போயிற்றா இது? இல்லை. இந்த நிகழ்ச்சி பற்றி சாத்தான்குளம் என்ற ஊரில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்தார் வேதரத்தினம் சொல்லிய போது, கூட்டத்தில் ஒரே சிரிப்பு கும்மாளம் எகத்தாளம், கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது தன் காரில் அந்தப் பக்கம் வந்த அவ்வூர் மாஜிஸ்டிரேட்டுக்கு வந்ததே கோபம். மறுநாள் பிள்ளைக்கு இந்தப் பேச்சுக்காக ஆறு மாத சிறை தண்டனை கொடுத்தார். ஒரு நிகழ்ச்சிக்கு இரண்டு இடத்தில் தண்டனை. என்ன கோமாளித்தனம்.


பெரும் செல்வந்தரான வேதரத்தினம் சிறையில் அடைக்கப்பட்டார். சொத்துக்கள் பறிமுதலாயின. அவர் குடும்பம் சோற்றுக்கும் சிரமப்பட வேண்டிய நிலை. தங்கக் கிண்ணத்தில் பால் சோறு சாப்பிட்ட குழந்தை பழம் சோற்றுக்கு அழுதது கண்டு அக்கம்பக்கத்தார் கண்ணீர் சிந்தினர். அவர் மனைவி பதினைந்து மைலில் இருந்த அவரது ஊருக்குச் செல்ல பஸ்சுக்குக் காசில்லாமல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடந்து சென்ற கொடுமையும் நடந்தது. விடுதலைக்காக இந்த நாட்டில் சாதாரண குடும்பப் பெண்கள் கூட பட்ட துயர் அம்மம்மா! எண்ணிப் பார்க்க மனம் பதறுகிறது.

உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட சென்னை டாக்டர் ருக்மணி லட்சுமிபதி என்ற அம்மையாரை புளியம் விளாரால் அடித்து, கால்களைப் பிடித்து இழுத்துச் சென்று புதரில் விட்டெறிந்த கொடுமையும் இதே வேதாரண்யத்தில்தான் நடந்தது. இவரைப் பற்றிய கட்டுரையை இந்தத் தொடரில் விரைவில் காணலாம்.
சர்தார் வேதரத்தினம் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பல ஆண்டுகள் இருந்திருக்கிறார். 1929இல் வேதாரண்யத்தில் தமிழ் மாகாண காங்கிரஸ் மகாநாட்டை சர்தார் வல்லபாய் படேலை அழைத்து வந்து ராஜாஜி முன்னிலையில் வெற்றிகரமாக நடத்தினார். இவர் விரல் அசைந்தால் தஞ்சாவூர் மாவட்டம் அசையும் நிலை அன்று இருந்தது. இவ்வளவுக்கும் இம்மாவட்ட நிலப்பிரபுக்கள் அனைவரும் ஆங்கிலேயர்களின் ஆதரவாளர்களாகவும், நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகள் கம்யூனிஸ்ட் ஆதிக்கத்தின் கீழ் ஓர் வர்க்கப் புரட்சியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், நடுத்தர மக்கள் மட்டுமே தஞ்சை மாவட்ட சுந்ததிரப் போரில் பங்கு கொண்டார்கள். அவர்களுக்குத் தலைமை வகித்தவர் சர்தார் வேதரத்தினம் பிள்ளை.

இவர் சென்னை சட்டசபைக்கு 1952இல் மன்னார்குடி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957இல் திருத்துறைப்பூண்டி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டார். 1961இல் சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்த போது இவர் பேசிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு வந்து, உடல் நலம் கெட்டு இறந்து போனார். இவர் உடல் வேதாரண்யம் கொண்டு வரப்பட்டு கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் இறுதி அஞ்சலி செய்யப்பட்டது. இவரது சமாதியை இன்றும் அங்கு பல்லாயிரக்கணக்கானோர் சென்று பார்த்து வழிபட்டு மரியாதை செய்கின்றனர். வாழ்க சர்தார் வேதரத்தினம் பிள்ளை புகழ்! 
நன்றியுடன் அ .வெற்றியழகன் 

No comments: