Monday 10 June 2013

"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ் "எனும் சிறப்பு பெற்ற தமிழ் இன்றைக்கு மண்ணோடு மண்ணாக மறைந்து விடுமோ என்ற அச்சத்துடனே இதனை எழுதுகிறேன் ..ஏன் என்றால் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த இந்த நாட்டிலேஇன்றைக்கு தன் தாய் மொழியாம் தமிழைக் கற்றால், தரணியிலே வாழ்தல் அரிது என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது என்பதை நினைக்கும் போது வேதனை நெஞ்சை நெருடுகிறது . 


தமிழுக்கு மதிப்பில்லை எனில் தமிழனுக்கும் மதிப்பில்லை. ஏன் இந்த நிலை?ஏனென்றால் இந்தி படித்தால் இந்தியாவை வெல்லலாம் ..ஆங்கிலம் படித்தால் அவனியிலே உயரலாம் என்ற தவறான மனப்பான்மை நம்மிடையே வளர்ந்து விட்டது.
பள்ளியில் சேர்ந்தவுடன் அ , ஆ என்று ஆரம்பிக்கும் முறை மாறி A,B,C,D என்று ஆரம்பிக்கும் நிலை உருவாகிவிட்டது .அந்நிய மொழி அறிவை வளர்த்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை, அதை நான் எதிர்க்கவும் இல்லை. ஆனால் அந்நிய மொழியால் தான் 'அறிவு' வளரும் என்ற எண்ணத்தைத்தான்எதிர்க்கிறேன். வேற்று மொழிகளை கற்பதை நான் வேண்டாம் என்று கூறவில்லை ஆனால் தமிழ் நாட்டிலே பிறந்த தமிழனின் கல்விமுறை அனைத்துமே வேற்று மொழியில் இருப்பது எந்தவகையிலே நியாயம் என்றுதான் குரலேழுப்புகிறேன்..தன் தாய் மொழியையே இரண்டாவது அல்லது மூன்றாவதுவிருப்ப மொழிப் பாடமாக பயிலும் அவலம் உலகத்திலேயே தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது.


 "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் " என்று பாடிய பாரதி இன்றைக்கு இருந்தால் "யாமறிந்த வரையிலே தமிழ் மொழி கற்போர் எங்கும் காணோம்" என்று பாடினாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை..
தமிழிலே அனைத்து கல்விமுறையும் இருந்த பண்டைய தமிழ்ச் சமுதாயம் தரணியிலேதலைநிமிர்ந்து கடல்கடந்தும் சிறப்புற்று வாழ்ந்தது .இதனைத்தான் " வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு " என்று பாரதி பாடினான். 
ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஆசான் தாய்தான்.தன் தாயிடமிருந்து எப்படி ஒரு குழந்தை அனைத்தையும் எளிதாக கற்றுக் கொள்ளுமோ அப்படி நமதுபாடத்திட்டங்கள், கல்வி முறை நமது தாய்மொழியாம் தமிழிலே அமையுமேயானால் நம்மால் எளிதாக உணர்ந்து கற்று தேர்ச்சி பெறமுடியும். ஏன் தமிழ்வழி கல்வி அவசியம் என்று வலியுறுத்துகிறேன் என்றால் கற்பதற்கு எளிது என்பது மட்டுமல்ல ..ஒவ்வொரு மொழிக்கும் ஒரு கலாச்சாரம் உண்டு. பாரம்பரியம் மிக்க நமது கலாச்சாரம் நலிந்துநசிந்து வருவது ..தமிழ் வழி கல்வியை நாம் புறக்கணித்ததால் ஏற்பட்ட விளைவு என்பது என் ஆணித்தரமான கருத்து .


 எந்த ஒரு சமுதாயமும் அதன் கலாச்சாரத்தை இழக்குமேயானால் அதன் தனித்தன்மையை இழந்துவிடும். 
இப்படித்தான் வாழ வேண்டும் என்று வரையறுத்து நன்னூல் பல இயற்றி , இலக்கியமாய் உலகுக்குஇலக்கணமாய் வாழ்ந்த அந்த தமிழ்ச் சமுதாயம் மறுபடி இங்கே மலர வேண்டுமென்றால் தமிழ் வழி கல்வி நிச்சயமாய் செயல்படுத்தப்பட வேண்டும்.



தமிழிலே கற்றால் உலக அரங்கிலே உயர முடியாதுஎன்கிற வீணர்களுக்கு இங்கே நான் விடை கூற விரும்புகிறேன் . தமிழிலே கற்ற ராமானுஜரின் கணிதத்திறமை இன்றும் உலக அளவிலே அங்கீகரிக்கப்பட்டு அவரை கணிதமேதை என்று போற்றுகிறது.

 தொலை நோக்கி கருவிகள் இல்லாமலே விண்கோள்களை ஆராய்ந்த பெருமை தமிழருக்கு உண்டு .தமிழ் கல்வியை தரமாக பயின்றதால்தான் இன்றைக்கும் கம்பனும், வள்ளுவனும், இளங்கோவும்,பாரதியும் , கண்ணதாசனும் காலத்தை கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்



தமிழிலே கல்வி சாத்தியம் இல்லை என்று கூறும் குருமதி படைத்தோரே என்ன இல்லை எங்கள் தமிழில் ...மொழிவளம் இல்லையா? சொல்வளம் 


இல்லையா? இலக்கணம் இல்லையா? இலக்கியம் 


இல்லையா? நன்னெறி கூறும் நூல்கள் இல்லையா? 


அல்லது வரலாறு போற்றும் நாகரீகம் இல்லையா?


நோய் நாடி நோய் முதல் நாடி அது போக்கும் சித்தர் மருத்துவம் இல்லையா?.

வானளவ கோபுரங்கள்கட்டிய கட்டிடக்கலை நுட்பம் இல்லையா?

 கடலோடிகடாரம் வென்ற கப்பல் கட்டிய விஞ்ஞானம் இல்லையா?


சமயத்தை போதிக்கும் தத்துவம் இல்லையா? 

உடலைபேணும் யோகாசனம் இல்லையா?

வியுகம் வகுத்து போரிட்ட போர் தந்திரங்கள் இல்லையா?

 என்ன இல்லை?


கூறுங்கள் அதி மதி படைத்தோரே கூறுங்கள் . 


"பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொலப்பான்மை கேட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்?" எனக் கேட்ட பாரதிக்கு என்ன பதில் சொல்வதுகூறுங்கள் சான்றோரே கூறுங்கள்.


இறுதியாய் என் விண்ணப்பம் 
ஆங்கிலமாம் ஆவின் பால் தந்து குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களே - இனியாவது தாய்பாலாம்தமிழ் பால் தந்து வளர்த்திடுங்கள்!
மொழியை அரசியலாக்கி ஆதாயம் தேடும் அரசியல் வாதிகளே - எங்கள் தமிழ்த் தாயை அரியணையில் இருத்தி ஆட்சிமொழியாக்குங்கள்!
அந்நியமொழி கல்வியை அரும்பாடுபட்தட்டி எங்களை தமிழ் சான்றோன் ஆக்குங்கள்!டு கற்றுத்தரும் 

ஆசான்களே - தொல்காப்பியத்தின் தூசி 


சிந்தைநிறை செந்தமிழ் தோட்டத்திலே பூத்த மாணவ மணிகளே - தமிழ் கற்போம் தரணியிலே தலை நிமிர்ந்து நிற்போம் என உறுதியெடுங்கள்


"சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத் துலங்குக வையகமே" என்ற பாரதியின் கனவை நனவாக்குவோம் வாருங்கள்!


வாழ்க தமிழ் ! வளர்க தாய்த்திரு நாடு !

புதிய உதவி தொ .க .அலுவலர் பதவியேற்பு

நமது திருத்துறைபூண்டி ஒன்றியத்திற்கு புதிய 

உதவி  தொ .க .அலுவலராக   திரு 

இரா .பாலசுப்ரமணியன்  M .A .,M .ED.,அவர்கள்

கடந்த 01.06.2013 அன்று  பதவியேற்றார்கள் . 

அவர்களின் பணி சிறக்க வாழ்த்தி 

வணங்குகிறோம் .