Friday 8 July 2016

வரையாடு

நமது தேசிய விலங்கு புலி என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல், நமது மாநில விலங்கின் பெயர் வரையாடு. அது குறித்த விவரங்கள்..

மலைகளில் வாழும் ஆடு என்பதால் வரையாடு என அழைக்கப்படுகிறது. காட்டாடு இனத்திலேயே வரையாடு மிகவும் பெரிய உடலமைப்பு கொண்டது. இந்தியாவில் காணப்படும் மற்றொரு காட்டாடு இனமான இமாலய காட்டாட்டை விட வரையாடுகள் சற்று பெரியவை.

ஆண் வரையாடுகள் பெண் வரையாடுகளை காட்டிலும் இரு மடங்கு உடல் எடையுள்ளவை. அவற்றின் கொம்புகளும், வண்ணங்களும் கூட வேறுபட்டுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 1,200 முதல் 2,600 மீட்டர் உயர்ந்த மலைமுகடுகளிலுள்ள புல்வெளிகள் வரையாடுகளின் வாழிடமாகும்.

இவை 6 முதல் 150 வரை உறுப்பினர்களை கொண்ட குழுக்களாக வாழுகின்றன. இவை ஒன்றுக்கொன்று தகவல் பரிமாறிக் கொள்ள பார்த்தல், கத்துதல், நுகர்தல் ஆகிய உத்திகளை பயன்படுத்துகின்றன. இந்தவிலங்குகள் மிகவும் கூரிய பார்வையுடையவை. மேலும், எதிரிகளை மிக அதிக தொலைவிலிருந்து கூட வரையாடுகளால் கண்டுபிடிக்க இயலும்.

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வரையாடுகள் அதிகம் காணப்படுகின்றன. தமிழகத்தில் ஆனைமலை, மேகமலை, முக்கூர்த்தி மலைகள், நீலகிரி மலை, வால்பாறை, ஆழியார் மலை,ஸ்ரீவில்லிப்புத்தூரில் வரையாடுகள் வசிக்கின்றன.

மேலும், கேரளாவில் இரவிக்குளம் தேசிய பூங்கா, மூணாறு, அகத்திய மலைகளிலும் வரையாடு காணப்படுகிறது. இந்தியாவில், தற்போது 2 ஆயிரத்திலிருந்து 2 ஆயிரத்து 500 வரையிலான வரையாடுகள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
Nilgiri Tahr Adult.jpgNilgiri Tahr Adult.jpgNilgiri Tahr Adult.jpg

No comments: